பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்... தென்காசி மாவட்டத்தில் காரீப் பருவம் தொடங்கியுள்ள நிலையில், தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தென்காசி மாவட்டத்தில் காரீப் பருவம் தொடங்கியுள்ள நிலையில், தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்து, எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளால் உண்டாகும் மகசூல் இழப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

நடப்பாண்டில் வாழை, வெங்காயம், மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். தேர்வு செய்யப்பட்ட பயிர்களுக்கு உரிய பிரிமியம் தொகையை கடன் பெறும் விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் செலுத்தலாம்.

கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் உரிய முன்மொழிவு படிவம், பதிவுப் படிவம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் ஆகிய ஆவணங்களைக் கொண்டு பயிர் காப்பீடு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு ஆகஸ்ட் 31 வரையும், வெங்காயம் பயிருக்கு ஜூலை 31 வரையும் விண்ணப்பிக்கலாம். வாழைக்கு ஏக்கருக்கு ரூ.3250, வெங்காயம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1020, மரவள்ளிக்கு ஏக்கருக்கு ரூ.495.41தொகையை வங்கிகளில் செலுத்தி பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலரை அணுகலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.