இலவச பாட புத்தகங்களை எடைக்கு போட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்டு

மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலக கட்டுப்பாட்டில் இருந்து வரும் அனைத்து அரசு பள்ளிகளுக்கான பாட புத்தகங்கள் கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்பி வைக்கப்படும். தற்போது கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பழைய இரும்பு கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையை பெருமாள்சாமி(வயது 55) என்பவர் நடத்தி வருகிறார். இடப் பிரச்சினை காரணமாக இந்த கடையை காலி செய்ய வேண்டும் என்று கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது. அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிகிறது.

இதற்காக மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணி தலைமையில் அதிகாரிகள் இரும்பு கடைக்கு சென்றனர். அங்கு காலி செய்வதற்கான நோட்டீசை கடை வாசலில் ஒட்டினர். அப்போது இந்த கடையை ஆர்.டி.ஓ. மகாராணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கடையின் ஒரு பகுதியில் 2019-20 ஆம் ஆண்டுக்கான 6 முதல் 12-ம் வகுப்பு வரை 2 டன் எடையில் 3,134 பாட புத்தகங்கள் பண்டல், பண்டல்களாக மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து மயிலாடுதுறை போலீசாருக்குதகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கடை உரிமையார் பெருமாள் சாமியை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பாட புத்தகங்களை மாவட்ட பள்ளி கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் லாரியில் ஏற்றி வந்து விற்பனைக்காக எடைக்கு போட்டது தெரிய வந்தது. இதையடுத்து பள்ளி கல்வி ஊழியர் மேகநாதன், இரும்பு கடை உரிமையாளர் பெருமாள்சாமி ஆகிய இரண்டு பேர் மீதும் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இது குறித்து வருவாய்துறை, கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அதில் கல்வி அதிகாரி மேகநாதன் மாணவர்களின் நலனில் அக்கறையின்றி அரசின் இலவச பாட புத்தகங்களை சுய நலத்திற்காக எடைக்கு போட்டது உறுதியானது. அதன்பேரில் அவரை சஸ்பெண்டு செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி இன்று உத்தரவிட்டார். விலையில்லா பாட புத்தகங்களை பள்ளி கல்வி அதிகாரியே எடைக்கு போட்ட சம்பவம் கல்வியாளர்கள், பொதுமக்கள் மத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.