2 முதல் 11-ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி டிவி வழியாக கல்வி

கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு பாடங்கள் எப்போது ஒளிபரப்பப்படும் என்ற அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் தமிழகத்தில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. மாணவர்களின் கல்வி பாதிக்க படாமல் இருப்பதற்காக கல்வி தொலைக்காட்சி உள்பட தனியார் தொலைக்காட்சிகள் மூலம் பள்ளி பாடங்களின் ஒளிபரப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார்.

கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு எப்போதெல்லாம் பாடங்கள் ஒளிபரப்பப்படும்? என்ற அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர மற்ற அனைத்து நாட்களிலும், 2-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன.

ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 30 நிமிடம் என்ற அடிப்படையில், ஒவ்வொரு நாளும் அனைத்து வகுப்புகளுக்குமான பாடங்களையும் ஒளிபரப்புவதற்கு ஏதுவாக கல்வித்துறை திட்டமிட்டு இந்த அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. மாணவர்கள் kalvitholaikaatchi.com என்ற இணையதளத்துக்கு சென்று தாங்கள் படிக்கும் வகுப்புகளுக்கான பாடங்கள் எப்போது ஒளிபரப்பாகும் என்று தெரிந்துகொள்ளலாம்.

ஏற்கனவே கல்வி தொலைக்காட்சி மூலம் வழங்கப்பட்டு வரும் நீட் மற்றும் ஜே.இ.இ. முதன்மை தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான பாடங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுவதுமாகவும், பிற நாட்களில் காலை மற்றும் இரவில் சில குறிப்பிட்ட நேரங்களில் ஒளிபரப்பப்படுகிறது.