பரபரப்பான தமிழக தேர்தல் களம்- ஓர் அலசல்

அடுத்த ஆண்டு மே மாதம் 24-ம் தேதி 234 இடங்களை கொண்டுள்ள தமிழக சட்டசபையின் ஆயுள்காலம் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்பாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் நாடு கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் வேளையில் உரிய காலகட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும், தமிழகத்துக்கு மட்டுமின்றி, விரைவில் ஆயுள்காலம் முடிய உள்ள கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ளது.

மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்களாக திகழ்ந்து வந்த கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் மிகப்பெரிய ஆளுமைகள் இல்லாத நிலையில் தமிழகம் சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் இதுதான். அதுமட்டுமல்ல, தென் மாநிலங்களில் தமிழகத்தின் மூலம் தன் ஆதிக்க கொடியை நிலைநாட்ட பா.ஜ.க. நினைப்பதும் பரபரப்பை கூட்டியுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 இடங்களில், தி.மு.க. கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது. அ.தி.மு.க. கூட்டணி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், பாராளுமன்ற தேர்தலைப் போன்றே அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தொடரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இருந்தபோதிலும், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் மீண்டும் அதே கூட்டணியில் தொடருமா என்பதில் சந்தேகங்கள் எழத்தொடங்கி உள்ளன. இரண்டு கட்சிகளும் கூடுதலான இடங்களை ஒதுக்குகிற கூட்டணியில் சேருவதில் முனைப்பு காட்டக்கூடும் என சொல்லப்படுகிறது. எனவே அந்த கட்சிகள் இன்னும் தங்களது முடிவை அறிவிக்காமல் உள்ளன.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உதயமான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தற்போது டி.டி.வி. தினகரன் வழிநடத்தி வந்தாலும், சிறையில் உள்ள சசிகலா ஜனவரி மாதம் வெளியே வருவார் என்ற தகவல், அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இதுதவிர, நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம், பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்கி இருந்தாலும், சட்டசபை தேர்தலில் இன்னும் தீவிரம் காட்டும் அறிகுறிகள் தென்படுகின்றன. ரஜினிகாந்த் அரசியல் பிரவேசமும், அவர் தொடங்க உள்ள புதிய கட்சியும் சட்டசபை தேர்தலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தை தாண்டி தேசிய அளவில் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி, வரும் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத தொடக்கத்திலோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், தேர்தல் பிரச்சாரம் இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டது. தொடர்ந்து இரு முறை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அ.தி.மு.க., மூன்றாவது முறையாக ஆள துடிக்கிறது. இதற்கு மக்களின் ஆதரவை திரட்டும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், ஜனவரி முதல் வாரத்தில் காஞ்சிபுரத்திலிருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் மதுரையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி, தொடர்ந்து நடத்தி வருகிறார். ரஜினிகாந்த் வரும் 31-ம் தேதி தனது அரசியல் பயணம் குறித்த திட்டங்களை வெளியிட உள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என நட்சத்திரங்கள் தேர்தல் பிரசார மேடைகளை கலக்க உள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற கட்சிகளும் திரையுலக நட்சத்திரங்களை பிரச்சார களத்தில் இறக்க இருக்கின்றன.

1972-ல் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை தொடங்கிய பின்னர், தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு கட்சிகளையே மையப்படுத்தி வந்த தமிழக தேர்தல் களம், இப்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன் என திரை நட்சத்திரங்களின் கட்சிகளையும் மையப்படுத்துகிற சூழல் உருவாகி உள்ளது. அரசியல் களம் இதுவரை இல்லாத சூடான பேச்சுகளை, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை, அதிரவைக்கும் சவால்களை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. மக்களும் யாருக்கு வாக்கு அளிக்கலாம் என்பது பற்றி சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள். எனவே இந்த தேர்தலில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.