மூன்று மாதமாக சம்பளத்தில் பிடித்தம்; போக்குவரத்து தொழிலாளர்கள அதிருப்தி

அதிருப்தியில் போக்குவரத்து தொழிலாளர்கள்... தமிழக போக்குவரத்து தொழிலாளர்களின் மாத சம்பளத்தில் கடந்த 3 மாதங்களாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊரடங்கு காலத்தில் பணிகள் இல்லாததால் அவர்களின் தற்செயல் விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்புகளை கழித்து அதற்கான ஊதியத்தை பிடித்தம் செய்து வருகின்றனர். அதன்படி, கடந்த 3 மாதங்களாக பிடித்தம் செய்து வருவது போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் சிலர் கூறும்போது, ''கொரோனா ஊரடங்கில் மற்ற துறைகளின் அதிகாரிகள், தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வதில்லை. ஆனால், போக்குவரத்து கழகத்தில் மட்டும் கடந்த 3 மாதங்களாக சம்பளத்தில் பிடித்தம் செய்து வருகின்றனர்.

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன் எனத் தெரியவில்லை. ஏற்கெனவே, நாங்கள் பெற்ற சம்பளத்தில் பிடித்தம் செய்து வருவது கஷ்டமாக இருக்கிறது.'' என்றனர்.

இதுதொடர்பாக மாநில அரசுபோக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்க (எஸ்விஎஸ் - ஏஏபி) மாநிலத் தலைவர் ஆர்.எம்.சுவாமி, மாநில செயலாளர் கே.அன்பழகன் ஆகியோர் கூறும்போது, ''தமிழகத்தில் கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் தொழிலாளர்களின் ஊதியத்தை மாதந்தோறும் தொடர்ந்து பிடித்தம் செய்வது கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பிடித்தம் செய்துள்ள சம்பளத்தை போக்குவரத்து கழகங்கள் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.