கொரோனா குறித்த உண்மையை தெரிவித்த பெண் பத்திரிக்கையாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியபோது சில பத்திரிக்கையாளர்கள் வுகான் நகருக்கு சென்று வைரஸ் தொடர்பான தகவல்களை சேகரித்து உலகிற்கு சமூக வலைதளம் மூலம் வெளிக்காட்டினர்.

ஆனால், அவ்வாறு வைரஸ் தொடர்பான தகவல்களை உலகிற்கு வெளிப்படுத்திய பத்திரிக்கையாளர்களை சீன அரசு கைது செய்துள்ளது. அந்த வகையில், ஜாங் ஜான் என்ற 37 வயது சீன பெண் பத்திரிக்கையாளரை சீன அரசு கடந்த ஆண்டு இறுதியில் கைது செய்து சிறையில் அடைத்தது. அதில் கொரோனா பரவல் குறித்த உண்மையை வெளியிட்டதற்காக, குழப்பத்தை தூண்டியதற்காக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த விசாரணை முழுமையடைந்து இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை ஷாங்காய் நீதிமன்றம் வழங்கியது. அதில் ஜாங் ஜான் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகவும், அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும்ம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து ஜாங் ஜான் மேல் முறையீடு செய்ய இருப்பதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.

இதேபோல், சீனாவில் கொரோனா பரவல் குறித்து தனிப்பட்ட முறையில் செய்திகளை வெளியிட்ட பலரும் மாயமாகியுள்ள நிலையில், முதல் நபராக ஜாங் விசாரணைக்குட்படுத்தப்பட்டு அவருக்கு தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.