பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமனம்

பிரிட்டன்: முன்னாள் பிரதமர் நியமனம்... பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து சுவெல்லா பிரேவர்மென், நீக்கப்பட்டார். பாலஸ்தீன ஆதரவு பேரணியை போலீசார் கையாண்ட விதம் குறித்து விமர்சித்ததால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தார்.

இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அமைச்சரவையில் மேலும் ஒரு அதிரடி மாற்றத்தையும் ரிஷி சுனக் மேற்கொண்டுள்ளார். அதன்படி, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான டேவிட் கேமரூன் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டேவிட் கேமரூன் கடந்த 2010-2016 இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்தார்.

2016-ம் ஆண்டு பிரெக்சிட் பொது வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததால், பிரதமர் பதவியில் இருந்து டேவிட் கேமரூன் பதவி விலகினார். அதன்பிறகு கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய பொறுப்புக்கு டேவிட் கேமரூன் வந்துள்ளார். அதேபோல், வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஜேம்ஸ் கிளவர்லி, உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேமரூனின் நியமனம் அரசியல் பார்வையாளர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சரவையில் இத்தகைய உயர் பதவியேற்பது மிகவும் அரிதானவொன்று. முன்னாள் பிரதமர் ஒருவர் மீண்டும் அமைச்சராக இணைவதும் சில பத்தாண்டுகள் இருக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியமில்லாத மேலவையின் உறுப்பினராக டேவிட் கேமரூன் நியமிக்கப்படுவார் என்று அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.