மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கும் இன்று முதல் இலவச லட்டு பிரசாதம்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் இறுதியில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இந்த நிலையில் அரசின் உத்தரவை தொடர்ந்து, இந்த மாதம் 1-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு தரிசனம் நடைபெற்று வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்கின்றனர். கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

பக்தர்கள் அனைவரும் அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் வரிசையில் நிற்பவர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் மெட்டல் டிடெக்டர் சோதனையும் நடப்பதால் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் வெகுதூரம் வரிசையில் காத்திருக்கும் நிலையும் உள்ளது. எனவே தெற்கு கோபுர வாசல் வழியாகவும் பக்தர்களை உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நிறுத்தப்பட்ட இலவச லட்டு பிரசாதத்தை வழங்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் இலவச லட்டு பிரசாதம் மீண்டும் வழங்கப்பட உள்ளதாக கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், அரசு அறிவித்த வழிகாட்டுதல்படி கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். முதல் நாள் சுமார் 3 ஆயிரம் பக்தர்களும், 2-வது நாள் 2 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தெற்கு கோபுரம் வழியாக சிறப்பு நுழைவு கட்டணம் செலுத்தி தரிசனம் செய்யும் பக்தர்களும், அம்மன் சன்னதி கிழக்குவாசல் வழியாக இலவச தரிசனம் செய்யும் பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதே போன்று கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் மீண்டும் இலவச லட்டு பிரசாதம் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கான பணிகளை தொடங்கி விட்டோம். அரசு வழிகாட்டுதல்படி பக்தர்களுக்கு சமூக இடைவெளி விட்டு பாதுகாப்பாக லட்டு வழங்கப்படும். சுவாமி தரிசனத்திற்கு ஆன்-லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றார்.