கொடைக்கானலில் இடைவிடாமல் கொட்டும் கனமழை- போக்குவரத்து பாதிப்பு

புரெவி புயல் காரணமாக கடந்த 2-ந் தேதி முதல் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை இன்று 3-வது நாளாக இடைவிடாமல் கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், மின் கம்பிகள் அறுந்து விழுந்தும் வருகிறது. கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலை மச்சூரில் மரம் முறிந்து விழுந்தது. பூம்பாறை செல்லும் சாலையில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் மரங்கள் விழுந்ததால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல்-பழனி சாலையில் கோம்பைக்காடு பகுதியில் தடுப்பு சுவரில் மண் சரிவு ஏற்பட்டது. ஆங்காங்கே சில பாறைகளும் உருண்டு விழுந்தது. உடனடியாக மண்சரிவை சீரமைக்க தீயணைப்பு படையினர் வந்து மரங்களை அப்புறப்படுத்தினர். கொடைக்கானலில் கனமழை எச்சரிக்கை காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதுடன் வெளியூர் வாகனங்கள் வருவதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறிகள், சிலிண்டர் போன்ற அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வெளியூர் வாகனங்களை கண்காணிக்க அடுக்கம்சாலை, பழனிசாலை, வத்தலக்குண்டு சாலை ஆகிய 3 இடங்களிலும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளி வரமுடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். தொடர் மழை காரணமாக மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

கொடைக்கானல் நகர் மட்டுமின்றி மலை கிராமங்களிலும் மின் வினியோகம் மற்றும தொலைதொடர்பு வசதி கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் அத்தியாவசிய தேவைகளுக்குகூட யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். கொடைக்கானல்-பழனி சாலையில் இன்று 2-வது நாளாக மண் சரிவு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.