தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஜூலை 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும்

முழு ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள பகுதிகளுக்கான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

முழு ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள பகுதிகளான பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகள் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகள் அடங்கும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகள், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சி மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகள் ஆகியவை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முழு ஊரடங்கிற்கான பகுதிகள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

மேற்கண்ட இடங்களில் நோய்த்தொற்று அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, நோய்ப்பரவலை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன் படி, பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ் 19.6.2020 நள்ளிரவு முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது.

மதுரை மாவட்டத்தில் 24.6.2020 நள்ளிரவு முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது.

இந்த ஊரடங்கு கொரோனா நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவியதால், இந்த முழு ஊரடங்கு மேற்கண்ட பகுதிகளில் மட்டும் 5.7.2020 வரை தொடரும். 19.6.2020-க்கு முன்னர் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 நள்ளிரவு முதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை தொடரும். அதேபோல் மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 24.6.2020க்கு முன்னர் இப்பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 நள்ளிரவு முதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை தொடரும்.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காய்கறி/பழக்கடைகளைப் போன்று, பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளிடம் இருந்து முறையான வியாபார அனுமதி பெற்ற மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.