பக்ரைனில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அரசு அறிவிப்பு

கடந்த ஓராண்டாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் 7 கோடிக்கும் அதிகமானோரை தாக்கியுள்ளது. மேலும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது. அமெரிக்கா போன்ற வலுவான சுகாதார கட்டமைப்பு கொண்ட நாடுகளும் கூட கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.

இந்நிலையில் இந்த கொடிய வைரசை ஒழிப்பதற்கு தடுப்பூசி ஒன்று மட்டுமே தீர்வு என்பதை உணர்ந்த உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுவீச்சில் இறங்கின. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 95 சதவீதம் பயனளிக்கக்கூடியது என்று கடந்த மாதம் 18-ந் தேதி பைசர் நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து இந்த தடுப்பூசியை உலகின் பிற நாடுகளில் அவசர தேவைக்கு பயன்படுத்த பைசர் நிறுவனம் ஒப்புதல் கோரியது.

இதில் உலகிலேயே முதல் நாடாக இங்கிலாந்து பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு கடந்த 2-ந் தேதி ஒப்புதல் அளித்தது. இங்கிலாந்தை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான பக்ரைன் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது. 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட பக்ரைனில், மற்ற வளைகுடா நாடுகளுடன் ஒப்பிடுகையில் வைரஸ் பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது.

இருப்பினும் கொரோனா தடுப்பூசியை விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் அந்த நாடு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் பக்ரைனில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் மக்களுக்கு எந்த தடுப்பூசி போடப்படும் என்பது அந்த செய்தியில் குறிப்பிடப்படவில்லை. இங்கிலாந்து மற்றும் பக்ரைனை தொடர்ந்து பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த சவுதி அரேபியா தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.