குருக்களுக்கு அன்பு காணிக்கை செலுத்தும் குரு பூர்ணிமா கொண்டாட்டம்

சென்னை: இன்று குரு பூர்ணிமா கொண்டாடம்... குரு பூர்ணிமா தினம் குருக்களுக்கு நமது அன்பு காணிக்கையாகும். முழுப் பௌர்ணமி நாளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மகாபாரதத்தை படைத்த வேதமுனிவர் வியாசரின் பிறந்தநாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

அர்ஜூனனுக்கு குருஷேத்திரத்தில் பகவான் கிருஷ்ணன் ஞானகுருவாக இருந்து பகவத் கீதையை அருளினார் என்பது இறை நம்பிக்கை.... இந்நாளில் தான் புத்தர் பகவான் தமது முதல் உரையை உத்தரப்பிரதேசத்தில் அருளினார் என்றும் பலர் நம்புகின்றனர்.

இந்நன்னாளில் பொதுமக்கள் கங்கை யமுனை கோதாவரி சரயூ ஷிப்ரா போன்ற புண்ணிய நதிகளில் நீராடி குருவுக்கு வழிபாடுகள் செய்து மரியாதை செலுத்துகின்றனர்.

குருநானக், புத்தர், ஷிர்டி சாய்பாபா, ரமணர், ராமகிருஷ்ணர், ஓஷோ உள்ளிட்ட பலருக்கு அவர்களின் சீடர்கள் இன்று குரு வழிபாடு செய்கின்றனர்.

கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ள தலைவர்கள் , எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் ஆசான்களாக வணங்கப்படுகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.