தமிழகத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும்

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தமிழகத்தில் மேற்கு திசை காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். நாளை முதல் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.

இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களிலும், நாளை கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்திலும், வரும் 7-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களிலும், வரும் 8-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.வடகிழக்கு வங்கக்கடலில் காற்று சுழற்சி நிலவுகிறது.

எனவே இதன் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடலை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெறும். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை வாய்ப்பு அதிகரிக்கும் என அதில் கூறப்பட்டு உள்ளது.