பப்ஜி விளையாட்டு தடை காரணமாக ஐஐடி மாணவர் தற்கொலை

இந்திய மற்றும் சீன நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு வருவதை அடுத்து சீனாவின் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது. ஏற்கனவே டிக் டாக் உள்பட 59 செயலிகளுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய அரசு தடை விதித்த நிலையில் சமீபத்தில் பப்ஜி உள்பட 118 செயலிகள் தடைசெய்யப்பட்டது

இந்தியாவில் பப்ஜி விளையாட தடை செய்ய வேண்டும் என ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வந்த நிலையில் தற்போது அந்த விளையாட்டு தடை செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அதே நேரத்தில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான பல இளைஞர்கள் மன உளைச்சலில் இருப்பதாகவும் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்வர வேண்டுமென்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 21 வயது ஐஐடி கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

அப்போது அவர் தினமும் இரவு நேரங்களில் நீண்ட நேரம் பப்ஜி விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்றும், கடந்த வாரம் பப்ஜி தடை செய்யப்பட்டது முதலே சோகமாக இருந்ததாகவும் அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பப்ஜி விளையாட்டு தடை காரணமாக ஐஐடி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.