இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. ஆனால் அதிகமாக பரவி வரும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு 38,53,407 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 83,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1043 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போது, கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 67376 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,70,492 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 68584 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,15,538 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.75 சதவீதமாகவும், குணமடைதல் 77.09 சதவீதமாகவும் உள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 4,55,09,380 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று மட்டும் 11,72,179 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.