ஊரடங்கு தோல்வி அடைந்ததன் விளைவை இந்தியா சந்தித்து வருகிறது - ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காணொலி மூலம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மத்திய அரசின் கொரோனா நடவடிக்கைகள் தொடர்பாக கூறியதாவது:-

அதிவேகமாக கொரோனா உயரும் நாடாக இந்தியா உள்ளது. நாம் இப்போதுதான் ஊரடங்கை நீக்குகிறோம். ஊரடங்கின் நோக்கமும், தேவையும் தோல்வியடைந்துவிட்டது. படிப்படியாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால் அது நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு உதவவில்லை. வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

ஊரடங்கு தோல்வி அடைந்ததன் விளைவை இந்தியா சந்தித்து வருகிறது. இந்த விஷயத்தில் தனது முதல் திட்டம் தோல்விடைந்துவிட்டது என்பதை பிரதமர் ஏற்றுக்கொள்வார் என நினைக்கிறேன்.

எனவே, அரசு தனது புதிய திட்டத்தை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும். நமக்கு இப்போது பணம் மற்றும் மூலதனம் என்ற ஊசி தான் தேவை. அதை செய்யாவிட்டால் நிலைமை அபாயகரமானதாக மாறும். கொரோனா வைரஸ் பிரச்சினையால் நாட்டில் வேலையின்மை மேலும் அதிகரித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்து உள்ளனர். அவர்கள் தனித்துவிடப்பட்டிருக்கிறார்கள். யாரும் அவர்களின் நம்பிக்கையை இழக்கக் கூடாது. இப்போது கூட நம்மால் நடவடிக்கை எடுக்க முடியும். ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு 7500 ரூபாய் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.