துபாயில் 16 ஆண்டுகளாக பாஸ்போர்ட் இல்லாமல் தவித்த இந்திய தொழிலாளி

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் கமாரெட்டி மாவட்டத்தில் உள்ள சித்தமனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நீல எல்லையா என்பவர் கடந்த 2004-ம் ஆண்டு கட்டுமான தொழிலாளியாக துபாய்க்கு வந்து வேலை செய்தார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வேலையை இழந்தார். இதனால் துபாய், சார்ஜா என அங்கும், இங்கும் கிடைத்த வேலையை செய்து வசித்து வந்தார்.

இந்நிலையில் அவரது பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால் கடந்த 16 ஆண்டுகளாக நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தார். அமீரக அரசு கடந்த மே 18-ந் தேதி அளித்த பொதுமன்னிப்பில் விசா மற்றும் ஆவணங்கள் இல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி அளித்தது. இந்த பொதுமன்னிப்பு வருகிற நவம்பர் மாதம் 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்பின், சில சமூக பணியாளர்கள் முயற்சியால் அவர் நாட்டை விட்டு வெளியேற இந்திய துணைத்தூதரகத்தை அணுகினார். இந்திய துணைத்தூதர் டாக்டர் அமன்புரி மற்றும் தூதரக அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக அவருக்கு பாஸ்போர்ட்டிற்கு பதிலாக அவசரகால சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், நாள் ஒன்றுக்கு 25 திர்ஹாம் வீதம் 16 ஆண்டுகளுக்கு ஒரு லட்சத்து 46 திர்ஹாம் அபராதம் இருந்தது.

அமீரக அரசின் பொதுமன்னிப்பு காரணமாக அவரது அபராதம் விலக்கி கொள்ளப்பட்டு சொந்த ஊர் திரும்ப அனுமதி பெறப்பட்டது. இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இந்திய துணைத்தூதரகம் அளித்த விமான டிக்கெட்டில் ஐதராபாத் நகருக்கு சென்றார். விமான நிலையத்தில் அவரது மனைவி ராஜவ்வா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கண்ணீருடன் அவரை வரவேற்றனர். பின்னர் அமீரக அரசுத்துறைகள் மற்றும் இந்திய துணைத்தூதரகத்தின் உதவிக்கு நன்றி கூறினர்.