துணை அதிபர் கமலா ஹாரீசுக்கு வாழ்த்து தெரிவித்த பூர்வீக கிராம மக்கள்

அமெரிக்கா அதிபர் தேர்தலில் அமோக வெற்றியை பெற்று அதிபராகிறார் ஜோபைடன். முதல் பெண் துணை அதிபராகிறார் தமிழக வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ். இதையடுத்து அவருக்கு பூர்வீக கிராமத்தில் கோலம் போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் துணை அதிபராகும் தகுதியைப் பெற்றுள்ளார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ். ஜோ பைடன் அதிபராக வெற்றி பெற்றது இதனைச் சாத்தியப்படுத்தியுள்ளது. அதன்மூலம், அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு தேர்வாகியுள்ள முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் என்ற பெருமையையும் பெறுகிறார் கமலா ஹாரிஸ்.

55 வயதாகும் கமலா ஹாரிஸின் அம்மா இந்தியாவைச் சேர்ந்தவர். அப்பா ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர். கமலா ஹாரிஸின் தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரது ரத்த உறவுகள் சென்னையில் வசிக்கின்றனர். அவர்களின் பூர்வீகம் திருவாரூர் ஆகும்.

இந்நிலையில் இன்று அமெரிக்க துணை அதிபராகவுள்ள கமலா ஹாரீஸ்க்கு தாய்வழி பூர்வீக கிராமம் திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் கிராமத்தில் பெண்களும் குழந்தைகளும் தங்களது வீடுகளில் கோலம் போட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வாழ்த்து கோலங்களில் வணக்கம் அமெரிக்கா, கமலா ஹாரிசுக்கு வாழ்த்துகள், பிரைடு ஃபார் அவர் வில்லேஜ் (PRIDE OF OUR VILLAGE) என்ற வாசகங்களை எழுதி வாழ்த்து மழை பெழிந்து வருகின்றனர்.

மேலும் கமலாவின் வெற்றி மூலம் இந்த கிராமம் உலகப்புகழ் பெற்றுவிட்டதாகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கும் நாளை எதிர்பார்த்திருப்பதாகவும் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.