டேரன் சமி கூறிய இனவெறி தொடர்பான கருத்துக்கு இர்பான் பதான், பார்தீவ் பட்டேல் மறுப்பு

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்தவர் போலீசார் பிடியில் சிக்கி கொல்லப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், இனவெறிக்கு எதிராகவும் நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்பாட்டத்திற்கு பல பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் சமூக வலைதளம் மூலமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் சமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடிய போது அவரையும்,இலங்கை வீரர் திசரா பெரேராவையும் 'கலு' என்று அழைத்ததாக கூறினார். ஆனால் டேரன் சமி இவ்வாறு கேலி செய்தவர்கள் யார்? எப்போது ? என தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து அவருடன் ஐதராபாத் அணியில் ஆடிய முன்னாள் வீரர் பார்தீவ் பட்டேல் கூறுகையில், அந்த சொற்களை யாரும் பயன்படுத்துவதை நான் கேள்விப்பட்டதாக நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் டேரன் சமியின் இந்த குற்றச்சாட்டு குறித்து முன்னாள் வீரர்கள் இர்பான் பதான் கூறுகையில், 2014-ம் ஆண்டில் டேரன் சமியுடன் இருந்ததாகவும், இனவெறி தாக்குதல் உண்மையிலேயே நடந்து இருந்தால் இந்த விஷயம் நிச்சயமாக விவாதிக்கப்பட்டு இருக்கும். எனவே பெரிய விஷயங்கள் எதுவும் விவாதிக்கப்படாததால் இது போன்ற விஷயங்கள் பற்றி எனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.