தமிழகத்தில் இன்னும் 7 நாட்களுக்கு மழை பெய்யக்கூடுமாம்

சென்னை: இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இது 21-10-2023 வாக்கில் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 20-10-2023 வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனை அடுத்து இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வருகிற 19.10.2023 முதல் வருகிற 24.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.