சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது; ஜிப்மர் இயக்குனர் தகவல்

புதுச்சேரி உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 64 இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் புகார் தெரிவித்துள்ளன. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். இளநிலை மருத்துவ கல்விக்கான அனுமதிக்கு புதுச்சேரி அரசின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சமீபத்திய இருப்பிட சான்றிதழ் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை இதற்கு முன் இருந்த அதே சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறுகிறது.

இதற்கான அனைத்து விவரங்களும் ஜிப்மர் வலைதள பதிவில் தகவல் வெளியீட்டில் தெரிவிக்கப்படுகிறது. ஜிப்மர் உள்ளீட்டுக்கான முன்னுரிமை என்ற மருத்துவ கலந்தாலோசனை குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ள தொகுப்பு புதுச்சேரி இருப்பிடத்தின் அடிப்படையிலான முன்னுரிமையே ஆகும்.

இந்த முன்னுரிமைக்கு தகுதியுடையவர் மட்டும் இதற்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். ஜிப்மர் வலைதள பகுதியில் தகவல் வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறையின் அடிப்படையிலேயே எம்.பி.பி.எஸ். எனப்படும் இளநிலை மருத்துவ கல்விக்கான அனுமதி நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.