ஒரு மணி நேர மழையில் தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை; கமல்ஹாசன் டுவிட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதன்பிறகு 3.40 மணியளவில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை வெளுத்து வாங்கியது.

சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் அனைத்து சாலைகளிலும் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில தாழ்வான இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குள் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர். திடீர் மழையால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் நனைந்தபடி சாலைகளில் பயணித்தனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது.

கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை. குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள் என பதிவிட்டுள்ளார்.