லாலுவின் சிறுநீரகம் 75 சதவீதம் செயலிழப்பு; மருத்துவக்குழுவினர் அறிக்கை

லாலுவின் சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்படுவதால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக ரிம்ஸ் மருத்துவக் குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் நிறுவனரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், 2017-ம் ஆண்டு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத், உடல்நலக் குறைபாடு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறது. இந்நிலையில், சிறுநீரகப் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ராஞ்சியிலுள்ள ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் லாலு பிரசாத்துக்கு பல மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவரது சிறுநீரகம் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது லாலுவின் சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்படுவதால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக ரிம்ஸ் மருத்துவக் குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால், லாலுவைக் காண அவரது மகனான தேஜஸ்வீ பிரசாத் யாதவ் இன்று நேரில் விரைந்துள்ளார்.

சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேஜஸ்வி யாதவ் பிரச்சாரக் கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடினர். தேர்தல் முடிவுகளிலும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி நல்ல வெற்றியைப் பெற்றது.

ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலையில், பா.ஜ.க கூட்டணிக்கு கடும் போட்டியை கொடுத்தது. ராஷ்டிரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக உருவானது. இந்த மிகப் பெரிய வெற்றியின் மூலம் தேஜஸ்வி யாதவ்வுக்கு தேசிய அளவில் கவனம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்குப் பிறகு தற்போதுதான் தேஜஸ்வி யாதவ் லாலு பிரசாத்தை பார்க்க மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.