மதுரை சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கில் பணியாற்றி வரும் காவல் துறையினரும் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் கூடல்மலை தெருவை சேர்ந்தவர் மலர்சாமி (வயது 56). இவர் மதுரை மாநகர சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். மலர்சாமி திருப்பரங்குன்றம் பகுதியில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மலர்சாமி கடந்த மாதம் 15-ந்தேதி மருத்துவ விடுப்பில் சென்றார். அவருக்கு 19-ந்தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் வெளியானது.இதில் சப்- இன்ஸ்பெக்டர் மலர்சாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் மதுரை பல்நோக்கு மருத்துவமனை பிரத்யேக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி மலர் சாமி இன்று அதிகாலை 3.45 மணியளவில் இறந்தார். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், அருண்குமார், விக்னேஷ்குமார் என்ற மகன்களும் உள்ளனர்.