கொரோனா பரவலுக்கு சீனாவை பொறுப்பேற்க செய்ய வேண்டும் - அதிபர் டிரம்ப்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. சபையின், 75-வது ஆண்டு பொது கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. இதில் உள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று உரையாற்ற முடியாததால் அவர்களின் பதிவு செய்யப்பட்ட உரை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் உரை நேற்று முன்தினம் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் ஒளிபரப்பப்பட்டது.

அதில் டிரம்ப் பேசுகையில், ‘சீனா வைரஸ்’ என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் நாம் தீவிர போரில் ஈடுபட்டுள்ளோம். கொரோனா, 188 நாடுகளில், லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ளது. சீனா தான், இந்த கொடிய வைரசை உலகிற்கு பரப்பியது. சீனாவின் மறைமுக கட்டுப்பாட்டில், உலக சுகாதார அமைப்பு உள்ளது. இந்த அமைப்பும், சீன அரசும் இணைந்து, ‘மனிதருக்கு மனிதர், கொரோனா வைரஸ் பரவாது’ என, பொய் அறிக்கை வெளியிட்டன என்று கூறினார்.

மேலும் அவர், உலக நாடுகள் சந்தித்த பாதிப்பிற்கான பொறுப்பை, சீனா மற்றும் உலக சுகாதார அமைப்பு ஏற்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை, ஐ.நா. எடுக்க வேண்டும் என்று கூறினார். தற்போது, ஜனாதிபதி டிரம்பின் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள சீனா இது தொடர்பாக அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

துகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துரதிருஷ்டவசமாக வதந்திகள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இட்டுக்கட்டியதற்காகவும், அனைத்து ஆதாரங்களுக்கு எதிராகவும், நிழல் அரசியல் நோக்கங்களுக்காகவும் சீனாவை இழிவுபடுத்திய அமெரிக்காவுக்கு சீன தரப்பு தனது உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.