கொழும்பில் யாசகர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடக்கம்

யாசகர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை... கொழும்பில் போக்குவரத்து சமிக்ஞைக்கு அருகே நிற்கும் யாசகர்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, கொழும்பில் யாசகர்களை தடுத்து வைக்க வார இறுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என கூறினார்.

கொரோனா தொற்று காலகட்டத்தில் யாசகர்கள் தங்கள் வாகனங்களை அணுகுவது குறித்து பொதுமக்கள் கவலைகளை வெளியிட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனை அடுத்தது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் யாசகர்கள் அனைவரும் உண்மையானவர்கள் அல்ல என்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக கொழும்பில் உள்ள பெரும்பாலான யாசகர்கள் ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அங்கு பணம் சேகரிக்கப்பட்டு பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இவ்வாறான போலி நபர்களிடமிருந்து உண்மையான யாசகர்களை அடையாளம் காண ஒரு சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது என்றும் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

அதன்படி உண்மையான யாசகர்கள் அடையாளம் காணப்பட்டு சமூக சேவைகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் போலி யாசகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அஜித் ரோஹன கூறினார்.