மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.94 அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 1-ந் தேதி, 63.97 அடியாக இருந்தது. அன்றைய தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 118 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து, அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதையடுத்து இந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஒரு கட்டத்தில், வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி என்ற அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையும் வேகமாக நிரம்பி வந்தது. குறிப்பாக கடந்த 16 நாட்களில் மட்டும் அணை நீர்மட்டம் 35.04 அடி உயர்ந்தது.

மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 99.03 அடியாகவும், நீர்இருப்பு 63.59 டி.எம்.சி.யாகவும் இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரத்து 182 கனஅடியாகவும் இருந்தது.

இந்நிலையில் இன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.94 அடியாகவும், நீர்இருப்பு 62.20 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரத்து 441 கனஅடியில் இருந்து 7 ஆயிரத்து 79 கனஅடியாக குறைந்தது.

காவிரி டெல்டா பாசனத் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 16 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.