தமிழக அரசு பள்ளிகளில் பாட புத்தகங்கள் இலவசமாக வழங்காமல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகம்: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பல ஏழை எளிய மாணவர்கள் தரமான கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றன. கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் கட்டண வசூல் அதிகமாக இருந்த காரணத்தால் பலர் அரசு பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை சேர்த்து இருக்கின்றனர். தனியார் பள்ளிகளுக்கு நிகரான கட்டமைப்பு வசதிகளும், கல்வித்தரமும் இருக்க வேண்டும் என அரசு பல நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது.

அதன் படி இந்த கல்வியாண்டு கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மதுரையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பள்ளிக்கல்வித்துறையில் அடுத்தடுத்து செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக இந்த பயிற்சி முகாம்களில் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன் பின் பேசிய அமைச்சர் கூறுகையில் பள்ளிக்கல்வித்துறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக இந்த பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம் அதிகாரிகளுக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு மதிப்பெண் வெளியாகி இருக்கிறது. மாணவர்கள் மதிப்பெண்களை பார்த்து மனம் தளரக் கூடாது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாடபுத்தகங்கள் உள்ளிட்ட 10 பொருள்கள் இலவசமாக வழங்கப்படும். அதனை மீறி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.