வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் நேற்று போராட்டம் நடத்தின. இதுகுறித்து எதிர்க்கட்சிகளை பா.ஜனதா கடுமையாக விமர்சித்துள்ளது.

மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான பிரகாஷ் ஜவடேகர், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில்,
எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்களில், ஒப்பந்த விவசாய முறை அமலில் உள்ளது. அதே கட்சிகள்தான், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றன. இதற்கு பெயர்தான் கபட நாடகம். இடதுசாரி கட்சிகள் ஆளும் கேரளாவில், வேளாண் விளைபொருட்கள் சந்தைக்குழுக்களே இல்லை. ஆனால், சந்தைக்குழுக்களை மோடி அரசு பலவீனப்படுத்துவதாக குற்றம் சாட்டி, இடதுசாரி கட்சிகள் தெருவுக்கு வந்து போராட்டம் நடத்துகின்றன என்று கூறியுள்ளார்.

மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் இதுகுறித்து கூறுகையில், பீகார் சட்டசபை தேர்தலிலும், பல மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களிலும் தோற்றதால் எதிர்க்கட்சிகள் அதிர்ந்து போய் உள்ளன. வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்ட பிறகுதான் அந்த தேர்தல்கள் நடந்தன. அச்சட்டங்களை விவசாயிகள் எதிர்ப்பதாக இருந்தால், பா.ஜனதா இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்காது என்று கூறினார்.

மேலும் அவர், மக்களிடையே பிரதமர் மோடியின் புகழை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியவில்லை. எனவே, நெருப்பை மூட்டுவதும், குழப்பத்தை விளைவிப்பதுமாக இருக்கின்றன. ஆனால் அவற்றின் முயற்சி வெற்றி பெறாது என்று கூறியுள்ளார்.