ஓபிஎஸ் இன்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை

சென்னை: அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்த தடை குறித்து ஆலோசனை ....அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனார். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இருந்த போதிலும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் கட்சி கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து அதில், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் இன்று ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்துகிறார்.

அதிமுக பெயர், சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்து உள்ள இடைக்கால தடை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.