செப்டம்பர் 14 முதல் 16 வரை உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

உத்தரகாண்ட் : இந்திய வானிலை ஆய்வு மையம் அனைத்து மாநில வாரியாக வானிலை நிலவரத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த 48 மணி நேரத்திற்கு மகாராஷ்டிராவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர், சம்பாவத், பாகேஷ்வர் மற்றும் நைனிடால் ஆகிய பகுதிகளுக்கு டேராடூன் பிராந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை அடுத்து செப்டம்பர் 14 முதல் 16 வரை உத்தரகாண்டின் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகள் மற்றும் ஓடைகள் அருகே தங்கியிருக்கும் மக்களை வானிலை ஆய்வாளர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். அடுத்த 5 நாட்களுக்கு தெற்கு குஜராத், வடக்கு மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கனமழை தொடரும் என தெரிவித்துள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில், திங்கள் மற்றும் செவ்வாய் இடையே இடைப்பட்ட இரவில் நகரின் சில பகுதிகளில் மழை பெய்தது.

மேலும் கொல்கத்தா, ஹவுரா, ஹூக்ளி, மேற்கு மிட்னாபூர், பிர்பூம் மற்றும் முர்ஷிதாபாத் ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை காலை வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கிழக்கு மிட்னாபூர், வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் நதியா போன்ற மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை வரை மிகக் கனமழை பெய்யும் என அதன்பின் புதன்கிழமை காலை வரை பலத்த மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பலங்கிர், கலஹண்டி, சோனேபூர், ஜார்சுகுடா, சுந்தர்கர், சம்பல்பூர், பர்கர், தியோகர், நுவாபாடா மற்றும் கியோஞ்சார் போன்ற இடங்களில் செவ்வாய்க்கிழமை வரை கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் ராஜஸ்தானின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.