காவிரி ஆற்றில் நீர் வரத்து உயர்வு .. 6-வது நாளாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை

ஒகேனக்கல்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அணைகளிலிருந்து காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு முறையாக திறந்து விடப்படவில்லை என தமிழ்நாடு அரசு புகார் தெரிவித்தது.

எனவே இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக வழங்குமாறு கர்நாடகாவுக்கு ஆணை உத்தரவிட்டது. இதனை கர்நாடகா அரசு அமல்படுத்தாததால் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

தமிழ்நாடு அரசின் அழுத்தம் காரணமாக காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவை தற்போது கர்நாடக அரசு உயர்ந்துள்ளது. கேஆர்எஸ் அணை, கபினி அணை என இரு அணைகளிலிருந்தும் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவியில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடுவதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு 6-வது நாளாக இன்றும் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.