வரும் 16ம் தேதி முதல் குடமுழுக்கு விழாவுக்கு அனுமதி

குடமுழுக்குக்கு அனுமதி... வரும் 16ம் தேதி முதல் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளும் வகையில் குடமுழுக்கு விழாவுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலிலிருந்து வருகிறது.

வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்து வருகிறது. எனவே தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபாடு செய்ய அனுமதி அளித்தது.

இந்த சூழலில் ஊரடங்கு காரணமாக பல்வேறு வழிபாட்டு தலங்களில் பணிகள் முடிந்தும் பல மாதங்களாகக் குடமுழுக்கு செய்ய முடியாமல் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குடமுழுக்கு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்குப் பல கோரிக்கைகள் வந்தன.

இந்நிலையில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நவம்பர் 16ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளும் வகையில் கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்தத் தமிழக அரசு அனுமதி அளித்து இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் வைரஸ் தொற்று ஏற்படா வண்ணம் முக கவசம் அணிதல் தனிநபர் இடைவெளி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து இவ்விழாக்களை நடத்த வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு எடுத்துவரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.