மாடர்னா கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கனடா அரசு அனுமதி

கனடாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியை பைசர் கொரோனா தடுப்பூசிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாகவே கனடா அரசு அனுமதியளித்தது. பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நல்ல பலன் அளிப்பது ஆய்வில் உறுதியானது. இதையடுத்து, மாடர்னா நிறுவனமும் தங்கள் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் விண்ணப்பம் செய்துள்ளது.

மாடர்னா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர முதல் நாடாக அமெரிக்க கடந்த சில நாடுகளுக்கு முன்னர் அனுமதியளித்தது. இதனைதொடர்ந்து அமெரிக்காவில் மாடர்னா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்நிலையில், மாடர்னா தடுப்பூசிக்கு கனடா அரசும் அனுமதியளித்துள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி கிடைத்துள்ளதையடுத்து மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசியை தேவைப்படும் பகுதிகளுக்கு விநியோகம் செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால் மாடர்னா தடுப்பூசி நாளை மறுதினம் முதல் கனடாவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பைசர் மற்றும் மாடர்னா என 2 நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதியளித்த நாடு என்ற பட்டியலில் கனடா சேர்ந்துள்ளது.