பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்து கோவில் கட்டுவதற்கு அனுமதி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவிலை கட்டுவதற்கு கடந்த ஜூன் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இஸ்லாமாபாத்தின் எச்9 பகுதியில் 20,000 சதுரடியில் இந்த கோவிலை கட்ட திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்கின.

ஆனால் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் காயித் கட்சியினரும் முஸ்லிம் மததலைவர்கள் பலரும் இந்து கோவிலை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தானின் மூலதன மேம்பாட்டு (சி.டி.ஏ) ஆணையம் சில சட்ட காரணங்களை சுட்டிக்காட்டி இந்து கோவில் கட்டுமான பணிகளை நிறுத்தியது.

இதையடுத்து மத விவகாரங்கள் துறை மந்திரி பிர் நூருல் ஹக் காத்ரி, இந்த விவகாரத்தை, மத பிரச்சினைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் முஸ்லிம் சித்தாந்த கவுன்சிலின் பார்வைக்கு கொண்டு சென்றார். முஸ்லிம் சித்தாந்த கவுன்சில் இஸ்லாமாபாத் அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இந்து கோவில் கட்டுவதற்கு அரசியலமைப்பில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என அரசிடம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு 6 மாதங்களுக்கு பிறகு தற்போது பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு இஸ்லாமாபாத்தில் இந்து கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விரைவில் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என அந்தப் பணிகளை கவனிக்கும் இந்து பஞ்சாயத்து அமைப்பு தெரிவித்துள்ளது.