புதிய அரசியலமைப்பின் மூலம் தேர்தல் சீர்திருத்தங்களுக்கு அழுத்தம்

சுதந்திரக் கட்சி தீர்மானம்... ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய அரசியலமைப்பின் மூலம் தேர்தல் சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுக்க உள்ளது.

இதற்காக அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை ஆதரிக்கவும் கட்சி முடிவு செய்துள்ளதாக கட்சியின் மூத்த வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் குறித்து சில கவலைகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னர் அறிவித்திருந்தது.

அத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டுள்ள கவலைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விவாதிக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 20 வது திருத்தத்தை ஆய்வு செய்ய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு குழுவையும் நியமித்தது. அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தலையிலான 10 உறுப்பினர்கள் கொண்ட இந்த குழு, 20 வது திருத்தம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்த குழுவிற்கு ஆய்வு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பரிந்துரைகளுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தல் சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.