மத்திய அரசு குறித்து ராகுல் காந்தியின் விமர்சனம்

புதுடில்லி: நம்மை தனிமைப்படுத்தி விட்டது.... பா.ஜ.,வின் மதவெறி உலகளவில் இந்தியாவின் நிலையையும் கெடுத்துவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ., செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை பேசினார். இது சர்ச்சையானது. இந்நிலையில், நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளத்தில் பா.ஜ.,வின் நவீன்குமார் ஜிந்தால் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தியாவில் ஆளும் பா.ஜ., கட்சியினரின் இந்த கருத்துகளுக்கு பல இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.இதையடுத்து, நுபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிந்தாலை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து பா.ஜ., மேலிடம் உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த காங்., எம்.பி., ராகுல், ‛உள்நாட்டில் பிளவுபட்ட இந்தியா, தற்போது வெளியிலும் பலவீனமாகிறது. பா.ஜ.,வின் வெட்கக்கேடான மதவெறி நம்மை தனிமைப்படுத்தியது மட்டுமல்லாமல், உலகளவில் இந்தியாவின் நிலையையும் கெடுத்துவிட்டது' என்று விமர்சித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த விமர்சனம் இணையதளத்தில் வெகு வேகமாக பரவி வருகிறது.