கொரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி அடுக்கடுக்கான கேள்வி

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தடுப்பூசி உள்ளன. இதனால் விரைவில் கொரோனா தடுப்பூசி அமலுக்கு வரவுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சிகள் மற்றும் பரிசோதனைகள் நடந்து வருகின்றன. கொரோனா விஷயத்தில் மத்திய அரசை தொடர்ந்து, விமர்சித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கொரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதனை தேர்வு செய்யும்? அது ஏன் தேர்வு செய்யப்படுகிறது?, முதலில் யார், யாருக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும்?, அதை வினியோகம் செய்வதற்கான உத்தி என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், கொரோனா தடுப்பூசி இலவசம் என்பதை உறுதிப்படுத்த பி.எம்.கேர்ஸ் நிதி பயன்படுத்தப்படுமா? இந்தியர்கள் அனைவருக்கும் எப்போது கொரோனா தடுப்பூசி போடப்படும்? இந்த கேள்விகள் அனைத்துக்கும் பிரதமர் மோடி கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.