பயோ மெட்ரிக் முறையில் சிக்கல்; சர்வரின் வேகத்தை அதிகரிக்க ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை

தமிழகத்தில் 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 1-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதற்காக பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த பயோ மெட்ரிக் முறைப்படி, ரேஷன் கார்டில் உள்ளவர்களின் பெயர்களுடன் அவர்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் கைரேகை சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால், ஒரு ரேஷன் கார்டை உறுப்பினர் அல்லாத எவரும் கொண்டு சென்று பொருட்களை வாங்க முடியாது.

இந்த பயோ மெட்ரிக் முறை கடந்த 1-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அதனால் சில சிக்கல்களும் ஏற்பட்டுள்ளது. அதாவது சிலரின் கைரேகை பதிவு ஆதார் அட்டையுடன் உள்ள கைரேகையுடன் ஒத்து போகாமல் ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுகிறது.

பயோ மெட்ரிக் முறையில் கைரேகை ஒத்து போகாத நபர்களுக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய குறியீடு எண்(ஓ.டி.பி.) அனுப்பப்படும். அதனை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட எண்ணுக்கு ஓ.டி.பி. சரியாக சென்று சேரவில்லை என்றால், ரேஷன் கார்டுடன்(ஸ்மார்ட் கார்டு) இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு ஓ.டி.பி. அனுப்பப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது.

ஆனால், இணையதள வேகம் குறைவாக இருப்பதால், சர்வரில் இருந்து தகவல்களை பெறுவதற்கு காலதாமதம் ஆகிறது. இதனால், சில நேரங்களில் ஒரு நபருக்கு 10 நிமிடங்களுக்கு மேலாக காலதாமதம் ஆகிறது. அதன் காரணமாக மொத்தமாக பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைகிறது. எனவே, சர்வரின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.