பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி விடுதலை

கொழும்பு: விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி... விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவிய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சதீஸ் குமார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீதி நிர்வாகச் செயற்பாடுகளில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்த போதும் அவர், தொடர்ந்தும் சிறையில் இருந்தார்.

சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சதீஸ் குமார், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இதன்போது 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சதீஸ் குமார், 2017ஆம் ஆண்டு ஆயுள்தண்டனை உறுதியாகி 15 ஆண்டுகள் அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொது மன்னிப்பில் கடந்த மாதம் சதீஸ் குமார் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.