ஊட்டியில் குதிரை சவாரிக்கு அனுமதி அளிக்க கோரிக்கை

ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் ஊட்டி படகு இல்லம், தேனிலவு படகு இல்லம், பைன்பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குதிரை சவாரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் குதிரை சவாரி தொழிலை நம்பியிருந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுற்றுலா தலங்கள் திறந்தும் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இதற்கு குதிரை பந்தயத்துக்கு பயன்படுத்தப்பட்ட குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்தக்கூடாது எனவும், அதனை முறையாக பராமரிக்காமல் வீதிகளில் சுற்றித்திரிய விட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

அதன் காரணமாக ஊட்டி படகு இல்லத்தில் குதிரை சவாரி மேற்கொள்ளப்படும் இடம் பூட்டப்பட்டு, குதிரைகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். அதுபோன்று பைன்பாரஸ்ட் சுற்றுலா மையத்தில் காமராஜ் சாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால், அணையையொட்டி குதிரை சவாரி செய்ய முடியாத நிலை உள்ளது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்த குதிரை சவாரி தொழிலாளர்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்டும் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குதிரை சவாரிக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.