பரிசு பொருட்களுடன் கொரோனாவையும் பரப்பிய கிறிஸ்துமஸ் தாத்தா!

டிசம்பர் என்றாலே அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைதான் நினைவில் வரும். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் தாத்தா முக்கிய பங்கு வகிப்பார். கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுப் பொருட்களை கொடுப்பார் என குழந்தைகள் அனைவரும் ஆவலாக காத்து இருப்பர். அதோடு உறவினர்கள் அனைவரும் பரிசு பொருட்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வர்.

இந்நிலையில் பெல்ஜியத்தில் இயங்கி வரும் ஒரு ஆதரவு இல்லத்தில் தங்கி இருப்பவர்களை மகிழ்விப்பதற்காக சாண்டா கிளாஸை வரவழைத்து ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆண்ட்வெர்பின் ஹொமல் ரிஜ்க் எனும் பெயர்க்கொண்ட அந்த ஆதரவு இல்லத்திற்கு வந்த சாண்டா கிளாஸ் அங்குள்ளவர்களுக்கு பரிசு பொருட்களையும் இனிப்புகளையும் வழங்கி குஷிப் படுத்தினார். இதனால் மன அழுத்ததில் இருந்த அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் சாண்டா கிளாஸ் ஆதரவு இல்லத்தை விட்டு சென்றவுடன், சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சாண்டா கிளாஸ் வேடம் அணிந்தவருக்கும் உடல்நல பாதிப்பு காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட உடன் ஆதரவு இல்லத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அந்தச் சோதனையில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 14 பேர் பணியாளர்கள்.

இந்நிலையில் சாண்டா கிளாஸ் வேடமிட்டவர் முகக்கவசம் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தார் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் சிறந்த நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளதால் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.