சாத்தான்குளம் கொலை வழக்கு: 5 காவலர்கள் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரின் லாக்அப் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் அந்த வழக்கை கடந்த 10-ந் தேதி சி.பி.ஐ. போலீசார் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.

கடந்த சில நாட்களாக அவர்கள் இந்த கொலை வழக்கு குறித்து சாத்தான்குளம், கோவில்பட்டியில் விசாரணை நடத்தினர். ஏற்கனவே இந்த வழக்கில் கைதானவர்களை 15 நாட்களுக்குள் காவலில் எடுத்து விசாரிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. இந்தநிலையில் தங்களது விசாரணையின் ஒரு பகுதியை நிறைவு செய்த சி.பி.ஐ. போலீசார் 4 பேர், நேற்று மாலை 4.30 மணி மதுரைக்கு வந்தனர்.

அவர்கள் மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டுக்கு சென்று, சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் குறித்த வழக்கில் கைதானவர்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இவர்கள் 5 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த மனுவை தலைமை குற்றவியல் நீதிபதி ஹேமந்தகுமார், விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்கள் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.