ஆந்திராவில் பள்ளி வகுப்பறையை மணமேடையாக்கிய மாணவன்

இன்றைய இளைய தலைமுறையினர் காதலை சமூக வலைதளங்களில்தான் கண்டறிகின்றனர். அதில் அவர்கள் காணும் காட்சிகளை நடைமுறைப்படுத்தவும் தொடங்கிவிடுகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமுந்திரி பகுதியில் உள்ள அரசு ஜூனியர் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வரும் மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவன் ஒருவனும் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவி ஒருவரும் காதலித்து வந்தனர்.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதால் இருவரும் சந்திக்காமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆந்திராவில் மீண்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டதையடுத்து இந்த காதல் ஜோடி இருவரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர். காதலின் அடுத்தக்கட்டமாக இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். வீட்டிற்கு தெரிந்தால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் பள்ளி வகுப்பறையையே அந்த மாணவன்-மாணவி தங்களது மணமேடையாக கருதி மாணவி கழுத்தில் மாணவன் தாலி கட்டியுள்ளார்.

இதை அங்கு இருந்த சக மாணவன் செல்போனில் வீடியோ எடுத்து பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாகி வருகிறது. வீடியோ காட்சியில் மாணவிக்கு மாணவன் வகுப்பறையில் வைத்து தாலி கட்டுகிறான். பின்னர் அந்த மாணவி, தன்னுடைய நெற்றியில் குங்குமம் வைக்குமாறு அந்த மாணவனிடம் கூறுகிறார். இதை இன்னொரு மாணவன் தனது செல்போனில் பதிவு செய்து உள்ளான். சீக்கிரம் தாலியைக் கட்டு, ஆட்கள் வந்து விடப்போகிறார்கள் என்று அந்த வீடியோவை எடுத்த சக மாணவன் கூறுவதும் அதில் பதிவாகி உள்ளது.

இந்த திருமணம் நடைபெறும் போது வகுப்பறையில் யாருமே இல்லை. இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி அறிந்த அந்த பள்ளி முதல்வர் மாணவர்களிடம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மாணவன், மாணவியையும் மற்றும் அவர்களுக்கு உதவிய மாணவனையும் டிஸ்மிஸ் செய்துள்ளார். இது தொடர்பாக போலீசாரும் சமூக நலத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.