தென்மேற்கு பருவமழை: திற்பரப்பு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அணைப்பகுதி மற்றும் மலையோர பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் பழையாறு, வள்ளியாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. பழையாற்றின் குறுக்கே நாகர்கோவில் அருகே உள்ள குமரி அணை, சபரி அணை, சோழந்திட்டை அணை போன்றவற்றில் வெள்ளம் மறுகால் பாய்ந்தோடுகிறது.

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றின் குறுக்கே வெட்டுமணிக்கும், குழித்துறை தபால்நிலைய சந்திப்புக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையின் மேல் சுமார் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது. இதனால், தடுப்பணை வழியாக பொதுமக்கள் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் செல்ல முடியாதபடி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று 2271 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 2257 கன அடிதண்ணீர் வருகிறது. சிற்றார்-1 அணைக்கு 141 கன அடியும், சிற்றார் -2 அணைக்கு 87 கன அடி தண்ணீரும் வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 427 கன அடி தண்ணீரும், சிற்றார் -1 அணையில் இருந்து 100 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. நேற்று முன்தினம் 50.85 அடியாக இருந்த பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3¾ அடி உயர்ந்து 54.60 அடியானது. இதே போல் 29.75 அடியாக இருந்த பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 1¾ அடி உயர்ந்து 31.60 அடியானது. இதே போல் மற்ற அணைகளின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவியில் யாரும் நுழையாதபடி 3 பேர் கண்காணித்து வருகிறார்கள். தற்போது அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.