ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்த விமான டிக்கெட் கட்டணத்தை திருப்பித்தர சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை 3 வாரங்களுக்குள் முழுமையாக திருப்பித்தர சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த கால கட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவற்றுக்குரிய கட்டணத்தை முழுமையாக திருப்பித்தர உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்தநிலையில், நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

ஊரடங்கு காலமான மார்ச் 25-ந் தேதி முதல் மே 24-ந் தேதிவரை முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை, 3 வாரங்களுக்குள் முழுமையாக திருப்பித்தர வேண்டும். ரத்து கட்டணம் என்ற பெயரில் பிடித்தம் செய்யக்கூடாது.

பயண முகவர் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை பயண முகவர்களுக்கு விமான நிறுவனங்கள் அளிக்க வேண்டும். அத்தொகையை பயணிகளுக்கு முகவர்கள் உடனே மாற்ற வேண்டும். என்று கூறி, இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.