கொரோனா பரிசோதனைக்கு பயந்து கழிவு நீர் கால்வாயில் குதித்து தப்பியவர்கள்

49 பேருக்கு கொரோனா... பேலியகொட மீன் சந்தையுடன் சம்பந்தப்பட்ட கொரோனா கொத்தணி இணைப்பாளர்கள் எனக் கருதப்படும் நபர்களிடம் நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பேலியகொட மீன் சந்தை இணைப்பாளர்களில் PCR பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்ல மறுத்த 18 பேர் சந்தைக்கு அருகில் உள்ள கழிவு நீர் கால்வாயில் குதித்து அடுத்த கரைக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறு தப்பிச் சென்றவர்களை பிடிப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவர்களில் தமது தவறை உணர்ந்துக்கொண்ட சிலர் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, தம்மை மீண்டும் PCR பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, தப்பிச் சென்ற இந்த நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.