அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை வலுவாக கட்டியெழுப்ப பேச்சு வார்த்தை

கொழும்பு: அமைச்சர் தகவல்... அரசாங்கத்தின் மீதான புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை வலுவாக கட்டியெழுப்புவதற்காகவே பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கலாநிதி. விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் அமைப்புக்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகிறது.


அதேநேரம் குறித்த கலந்துரையாடல்கள் மெய்நிகர் வழியில் முன்னெடுக்கப்படுகின்றன. அவை தனியாகவும் குழுவாகவும் இடம்பெறுகின்றன. குறிப்பாக, பிரித்தானியா, நோர்வே, அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் கலந்துரையாடல்களில் பங்கேற்று வருகின்றனர்.

அவர்கள் முதலீடுகளை செய்வதற்கு தயாராக இருந்தாலும், அவர்களுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் நம்பகத்தமையை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் இப்போதைய கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளார்.

இந்தப் பேச்சுக்கள் இலங்கையில் நடத்துவதற்கே திட்டமிடப்பட்டு வருகின்றது. இருப்பினும், இதுவரையில் திகதி உள்ளிட்ட இதர விடயங்கள் தீர்க்கமாக முடிவெடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.