நடுக்கடலில் மூழ்கிய தாய்லாந்து போர்க்கப்பல்… மீட்பு பணிகள் மும்முரம்

பாங்காக்: வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தாய்லாந்து போர்க்கப்பல் நடுக்கடலில் மூழ்கியது. போர்க்கப்பலில் இருந்த வீரர்கள் உட்பட அனைவரும் கடலில் விழுந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தாய்லாந்து கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் நேற்று இரவு தாய்லாந்து வளைகுடா கடல் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அந்த போர்க்கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 106 பேர் பயணம் செய்தனர்.


அப்போது, கடலில் திடீரென சூறைக்காற்று வீசியது. கடலும் கொந்தளித்தது. இதன் விளைவாக, போர்க்கப்பல் சக்தியை இழந்தது. மேலும், கப்பலுக்குள் கடல் நீர் புகுந்தது. மின்வெட்டு காரணமாக கப்பலுக்குள் புகுந்த கடல் நீரை வெளியேற்ற முடியவில்லை.

கடல் நீர் புகுந்ததால் நடுக்கடலில் கப்பல் மூழ்கத் தொடங்கியது. போர்க்கப்பலில் இருந்த வீரர்கள் உட்பட அனைவரும் கடலில் விழுந்தனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையின் போது, போர்க்கப்பலில் இருந்த 75 பேர் மீட்கப்பட்டனர்.

எனினும் கடலில் மூழ்கி உயிரிழந்த 31 இராணுவத்தினரை காணவில்லை. இதையடுத்து, காணாமல் போன வீரர்களை தேடும் பணியை மீட்பு குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர்.