எனது சகோதரர் கைது செய்யப்பட்டது நீதிக்கு நேர்மாறனது; எம்.பி., ரிஷாட் பதியுதீன் தகவல்

நீதிக்கு நேர்மாறானது... ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தனது சகோதரர் கைது செய்யப்பட்டமை நீதிக்கு நேர்மாறானது என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “என்னுடைய சகோதரர் நிரபராதி எந்தக் குற்றங்களுடனும் தொடர்புடையவர் அல்ல என்று நான் முன்னரே சொல்லியிருந்தேன்.

எவ்வாறான விசாரணைகளிற்கும் அவர் ஒத்துழைப்பினை வழங்குவார் என்றும் சொன்னேன். அந்த வகையில் 5 மாதங்கள் கழித்து எந்தக் குற்றச்சாட்டுடனும் அவருக்கு தொடர்பில்லை என்ற வகையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு சம்பவத்திற்காக விசாரணை மேற்கொள்ளும்போது குற்றவாளியாக இருந்தால்தான் சிறையிலே அடைப்பது வழமை என்று சட்டத்தரணிகள் கூறுகிறார்கள். அதற்கு நேர்மாறாக குற்றவாளி என்று நிரூபிக்கும் முன்னரே அவர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புகாவலில் வைக்கப்பட்டு 5 மாதங்கள் சிறையிலே அடைக்கப்பட்டார். தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.